இங்கிலாந்து பிரதமராக இருப்பவர், ரிஷி சுனக். இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவர், தனது மருமகன் குறித்து நிகழ்ச்சில் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், 'ஒரு மகள் ஒரு தந்தையை நேசிக்க வேண்டிய அளவுக்கு நான் என் தந்தையை நேசிக்கிறேன்' என ஷேக்ஸ்பியரின் நாடக வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கும் அவர், ”அவர் பிரதமராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் எங்கள் மருமகன், நாங்கள் அவரை அதே வழியில் நேசிக்கிறோம். எந்த வகையிலும் அது எங்களைப் பாதிக்கவில்லை; அவர் ஒரே நாட்டில் வாழ்ந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும். எனக்கும் ரிஷி சுனக்கிற்கும் இடையில் எதுவும் மாறவில்லை என்றாலும், அவர் பிரிட்டிஷ் பிரதமரான பிறகு உலகம் தன்னை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியது. உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும்போது, மக்கள் உங்களை வேறு வழியில் பார்க்கிறார்கள்; புதிய நட்புகள் வரும், புதிய அறிமுகங்கள் வரும். உங்களைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகளும் மாறும். எங்கள் மருமகன் ரிஷி பிரதமரானபோது, இங்கிலாந்தில் மக்கள் என்னிடம் நிறைய சலுகைகளைக் கேட்கத் தொடங்கினர். ஆனால் அவர் வேறொரு நாட்டின் பிரதமர் என்றும், எந்த சலுகைகளையும் கேட்க முடியாது என்றும் நான் அவர்களிடம் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.