யூன் சுக் யியோல் எக்ஸ் தளம்
உலகம்

தென்கொரியாவில் நடப்பது என்ன? | திடீரென ராணுவ ஆட்சியை அறிவித்த அதிபர்.. கிளம்பிய கடும் எதிர்ப்பு!

தென்கொரியாவில் அவசரகால ராணுவச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Prakash J

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக நீடித்துவருகிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்தது. தற்போது, அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கையாக, இருகொரியாவையும் இணைக்கும் முயற்சியை கைவிட வடகொரியா அரசு அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்ததுடன், தென்கொரியாவை முதல்முறையாக ஓர் எதிரி நாடு என்று குறிப்பிட்டது.

தொடர்ந்து, தென்கொரியா உடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாகத் துண்டித்தது. இதன்படி வடகொரியாவில் இருந்து தென்கொரியா செல்லும் சாலை, ரயில்வே வழித்தடங்களை தனது ராணுவத்தின் மூலம் வெடிவைத்து தகர்த்தது. மேலும், எல்லைப்பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து, தடுப்புகள் ஏற்படுத்தி, கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. மேலும், வடகொரியா மீது தென்கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என வடகொரியா எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் காரணமாக, இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன.

கிம் ஜாங் உன்

இந்த நிலையில் தென்கொரியா அரசு, இன்று அவசரகால ராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் அதிபர் யூன் சுக் யியோல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் இன்று தீடீரென் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ”வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கவும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அவசரகால ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன். இப்பிரகடனத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியல்ல. சுதந்திரம் , அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை பாதுகாக்க தக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும் தென்கொரியாவின் நாணயம் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், அந்நாட்டு ராணுவத் தளபதிகள் ராணுவ ஆட்சியை நிலைநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில், அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன. மேலும் இதுதொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தென்கொரியாவில் அதிபரின் மக்கள் அதிகார கட்சிக்கும் எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சிக்கும் சமீப நாட்களாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக இருதரப்பும் நாடாளுமன்றத்தில் கடுமையாக மோதிக் கொண்டன. இந்த நிலையில்தான் தென்கொரிய அதிபர் எதிரிநாடான வடகொரியாவிற்கு ஆதரவாகவும் சொந்த நாட்டுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி இந்த முடிவை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ராணுவ சட்ட அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி வாக்களித்துள்ளனர். சட்டத்தை திரும்ப பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 300 பேரில் 190 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.