உலகம்

இலங்கையில் வலுக்கும் போராட்டம் - நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள்

Sinekadhara

இலங்கையில் அதிபர் கோட்டபய ராஜபக்சவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது.

இலங்கையில் நாடாளுமன்றம் கூடியிருந்த நிலையில், அதன் அருகே திரண்ட பல்கலைக்கழ மாணவர்கள் ஏராளமானோர் கோட்டபய ராஜபக்ச அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முழுப் பொறுப்பேற்று கோட்டபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று கொழும்புவில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது, அதன் அருகே பத்தரமுல்ல பொல்துவ என்ற பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கெதிராக முழக்கங்களை எழுப்பியபடியே, நாடாளுமன்றத்தை முற்றுகையிட அவர்கள் முன்னேறினர்.

ஆனால் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களைத் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர், கூட்டத்தினர் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் மாணவர்களைக் கலைக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போலக் காட்சியளித்தது.