உலகம்

மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்

மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்

webteam

கல்லூரி ஒன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம டைந்தனர். 

ரஷ்ய நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல் லூரியில் படிக்கும் மாணவன் விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் (18). இவர் திடீரென்று சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பின்னர் அவர் தன் னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதல் நடத்திய மாணவன் கல்லூரியின் உணவு விடுதி அருகே உலோகங்களால் நிரப்பப்பட்டிருந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது தோழி மீது ஏற்பட்ட கோபம் காரணமாக அந்த மாணவன் இப்படி செய்துகொண்ட தாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கிரைமியாவில் வியாழன் முதல் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(சிசிடிவி கேமராவில் விளாடிஸ்லவ்)

சோவியத் யூனியன் 1991 ஆம் ஆண்டு உடைந்தபிறகு, கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் கிரைமியா பகுதியை ரஷியா இணைத்துக் கொண்டது. மக்களின் விருப்பப்படியே அவர்கள் தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பு தெரிவித்துவருகிறது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.