அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ஐதராபாத் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஐதராபாத் நகரைச் சேர்ந்த முகமது அக்பர் (30) என்ற இளைஞர் டேவ்ரி பல்கலைக் கழகத்தில் தனது மேற்படிப்பை படித்து வருகிறார். சிகாகோவின் அல்பானி என்ற பகுதியில் பார்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரை நோக்கி முகமது சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கியால் அவர் மீது சுட்டுள்ளார். இதில் முகமது படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 6-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த தகவலை கேட்டு ஐதராபாத் நகரின் உப்பால் பகுதியில் வசித்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தெலுங்கானா உள்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக புகார் அளித்த அவரது குடும்பத்தினர், அக்பருக்கு அமெரிக்காவில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு மத்திய அரசு பேச வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், அவசர விசாவில் அமெரிக்கா செல்ல உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முகமதுவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குசிபோட்லா, கான்வாஸ் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஷிங்டனில் வசித்து வரும் சீக்கியர் ஒருவர் மீது முகமூடி அணிந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவம் மார்ச் மாதம் நடைபெற்றது. துப்பாக்கியால் சுட்ட நபர் உங்கள் நாட்டிற்கு திரும்ப செல்லுங்கள் என்று கூறினார். அதேபோல் கடந்த ஜூன் மாதம் தெலுங்கானா இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அங்கு வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.