இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இன்று கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
தேசிய தமிழ்த்தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பலர் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து, கண்டன குரல் எழுப்பினர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்புக்களை சார்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.