வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | ”எரிக்கும் போராட்டம்” - அரசியலமைப்புக்கு முடிவுகட்ட மாணவர் சங்கத்தினர் முடிவு!

வங்கதேசத்தில், ஆண்டின் இறுதி நாளான நாளைய தினம், நாட்டின் அரசியலமைப்பை எரிக்கும் போராட்டத்தை மாணவர்கள் சங்கத்தினர் முன்னெடுக்க உள்ளனர்.

Prakash J

வங்கதேசத்தில், ஆண்டின் இறுதி நாளான நாளைய தினம், நாட்டின் அரசியலமைப்பை எரிக்கும் போராட்டத்தை மாணவர்கள் சங்கத்தினர் முன்னெடுக்க உள்ளனர். 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த அரசியலமைப்பு யாருக்கும் தேவையில்லை எனக்கூறிவரும் அவர்கள், இனி அந்த அரசியலமைப்பு சட்டங்களை பின்பற்றப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனினும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, இதுகுறித்து எந்த கருத்தும் கூறாமல் இருந்து வருகிறது. அரசியலமைப்புக்கு எதிரான இந்த நிகழ்வுக்கு முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த நிலையில், வங்கதேச நாடு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர், முஜிபுர் ரஹ்மான். இவர், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் ஆவார். நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்படும் இவரது சிலை, மாணவர்கள் போராட்டத்தின்போது சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டின் கரன்சியில் இடம்பெற்றிருந்த முஜிபுர் ரஹ்மான் நோட்டுகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது அவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை எரிக்கும் போராட்டத்தையும் மாணவர்கள் முன்னெடுத்திருப்பது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.