அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்துவருகிறது. மேலும் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், வளைகுடா முழுவதும் தாக்குதல்களும் மறைமுக மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
மேலும் வாஷிங்டனுக்கும் ஈரானுக்கும் இடையே, ஹார்முஸ் நீர்வழிப்பாதை வழியாகப் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் தேக்கநிலையில் உள்ளது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் ஹார்முஸ் நீரிணை வழியாக 26 கப்பல்களை அனுமதித்து ஒருங்கிணைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் போக்குவரத்து, IRGC கடற்படையின் அனுமதியுடனும் ஒருங்கிணைப்புடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஈரானின் ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கான முக்கிய காரணம்
இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையால் (IRGC) 26 கப்பல்களுக்கு திடீரென அனுமதி வழங்கப்பட்டிருப்பது, ஹார்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும், ஒரு புதிய போக்குவரத்து அமைப்பை முறைப்படுத்தவும் ஈரான் மேற்கொள்ளும் முயற்சியை வெளிப்படுத்துகிறது. எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியத் தடையரண் (chokepoint) ஆகத் திகழும் இப்பகுதியில், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், கடல்சார் நடவடிக்கைகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் இலக்கு வைத்துள்ளது.
வர்த்தகக் கப்பல்களின் பயணத்தைப் பயன்படுத்தி, ஜலசந்தியில் யார் பாதுகாப்பாகப் பயணிக்கலாம் என்பதில் ஈரானுக்கே நடைமுறை அதிகாரம் உள்ளது என்பதையும் அமெரிக்காவுக்கு இல்லை என்பதையும் ஐ.ஆர்.ஜி.சி நிரூபித்துள்ளது.