ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் மிகப் பிரபலமாக விளங்கும் காபி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது, ஸ்டார்பக்ஸ். இந்த நிறுவனம், தனது வணிகத்தில் மறுசீரமைப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்காக அது குறிப்பிடத்தக்க புது நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில், ‘ஸ்டார்பக்ஸ் காபி கம்பெனி’ எனப் பெயரை மாற்றியுள்ள நிறுவனம், சுயமாக பால் மற்றும் சர்க்கரை நிலையங்களை மீண்டும் கொண்டு வருவது மற்றும் காபி கோப்பைகளில் டூடுல்களை வரைவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரையன் நிக்கோலின், ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள மறுசீரமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். சுமார் 30% மெனுவைக் குறைத்துள்ள அவர், அதேநேரத்தில் பிராண்டை டிரெண்டில் வைத்திருக்க புரத டாப்பிங்ஸ் மற்றும் இளநீர் போன்ற புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் உணவும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதிய குரோசண்ட்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் வெளியிடப்படுகின்றன. மறுபுறம், அத்திட்டத்தின்படி, வட அமெரிக்காவில் உள்ள லாபம் ஈட்டாத தங்கள் கடைகளை மூட ஸ்டார்பக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் இந்நிறுவனம் வடஅமெரிக்காவில் 18,734 இடங்களைக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது 400க்கும் மேற்பட்ட கடைகளை மூடவுள்ளது. இதனால், செப்டம்பர் மாத இறுதியில் 18,300 கடைகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த மாதத்தில் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. முன்னதாக, இந்த நிறுவனம் கடந்த ஜனவரியில் 1000 பேரைப் பணிநீக்கம் செய்திருந்தது. மறுபுறம், பிரையன் நிக்கோலின் மறுசீரமைப்பு திட்டம், சந்தையில் அதிகரித்த போட்டிகளை எதிர்கொள்ள எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.