உலகம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பா ?

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பா ?

webteam

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்கே கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச கட்சிக்கு தாவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது, குழப்பமான நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. எனவே தேவையான எம்.பி.,க்களை தங்கள் வசம் இழுக்க ராஜபக்ச தரப்பு முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனைதொடர்ந்து ரணிலுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் சிலர், தற்போதைய நிலையை காரணம் காட்டி, ரணிலை கட்சியை விட்டு நீக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் குறித்து அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்ச அரசுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு குறைவாக இருப்பதால், அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள இலங்கை அரசு, ஒரு சில குழுவினர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருவதாகக் கூறியுள்ளது.மேலும் தனது தரப்புக்குத் தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.