srilankan airlines x page
உலகம்

பஹல்காம் தொடர்புடைய பயங்கரவாதிகள் தப்பியதாக தகவல்.. இலங்கையில் விமானம் சோதனை!

இந்தியாவில் தேடப்படும் நபர்கள் இலங்கைக்கு தப்பிச் சென்றதாகச் செய்திகள் வெளியான நிலையில், சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தைச் சோதனையிட்டுள்ளனர்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, இதுதொடர்பான விசாரணையை தீவிரமாய் தொடங்கியுள்ள என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) பயங்கரவாதிகள் குறித்து தகவல்களைச் சேகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தேடப்படும் நபர்கள் இலங்கைக்கு தப்பிச் சென்றதாகச் செய்திகள் வெளியான நிலையில், சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தைச் சோதனையிட்டுள்ளனர்.

srilankan airlines

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆறு சந்தேக நபர்கள் சென்னையில் இருந்து வந்த விமானம் மூலம் இலங்கையை அடைந்துள்ளதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலை அடுத்து, இன்று நண்பகல் கொழும்பு விமான நிலையத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 11:59 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், UL122 என்ற விமானம் விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

“ஆறு சந்தேக நபர்கள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்தே இந்தச் சோதனை நடைபெற்றது. இலங்கை காவல்துறை, இலங்கை விமானப்படை மற்றும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்” என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சந்தேகத்திற்குரியவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை.