உலகம்

இலங்கையில் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்க! தீவிரமடைகிறது போராட்டம்

ஜா. ஜாக்சன் சிங்

இலங்கை அதிபர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்நாட்டு பிரதமராக உள்ள ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியதை அடுத்து அங்கு மக்கள் புரட்சி வெடித்தது. தலைநகர் கொழும்புவில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதன் ஒருபகுதியாக, அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் உயிருக்கு பயந்து, தனது குடும்பத்தினருடன் அதிபர் கோட்டாபய ராஜபட்ச தப்பியோடினார். ராணுவ முகாமில் தஞ்சடைந்திருந்ததாக கூறப்பட்ட கோட்டாபய, இன்று மாலத்தீவு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர், தனது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. காலியாகவுள்ள அதிபர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் இலங்கை இடைக்கால அதிபராக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றார். கோட்டாபய ராஜபட்சவின் பரிந்துரையின் படி இடைக்கால அதிபராக ரணில் நியமிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழல் எழுந்துள்ளது.