SriLanka Chemmani x page
உலகம்

தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள்.. 380-இல் 362 அடையாளம்.. இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்!

இலங்கையின் செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி மற்றும் அங்கிருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தமிழர்களின் நெஞ்சங்களை மட்டுமல்லாது உலகையே உலுக்கியுள்ளது.

Prakash J

இலங்கைப் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை என உறவினர்கள் இன்னும் தேடிவரும் நிலையில், இலங்கையின் செம்மணியில் இதுவரை380 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதில் 362 மட்டும் அடையாளம் காணப்பட்டிருப்பது உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

1996ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து யாழ்ப்பாணம், இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்தபிறகு, சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. அவர்கள், விசாரணையின்றி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு செம்மணி (சித்துப்பாத்தி) பகுதியில் புதைக்கப்பட்டதாக ராணுவத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வழக்கும் பதிவாகி விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வுப் பணிகளின்போது சில மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், கடந்த ஆண்டு மத்தியிலும் செம்மணி பகுதியில் மயானம் அமைப்பதற்கான பணியின்போது 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், செம்மணி பகுதியில் போரில் காணாமல் போனவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின்படி, அங்கு தோண்டும் பணி பல கட்டங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி அங்கு தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுவரை 380 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதில் அவற்றில் 362 மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அகழ்வாய்வுகள் ஐரோப்பிய ஒன்றியம் (EU), பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் ராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில், வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி மற்றும் அங்கிருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தமிழர்களின் நெஞ்சங்களை மட்டுமல்லாது உலகையே உலுக்கியுள்ளது.