உலகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கொழும்பில் போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கொழும்பில் போராட்டம்

rajakannan

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டம் நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘பணக்காரர்களுக்கு செம்பினால் வாழ்வு, ஏழைகளுக்கு புற்றுநோய்ச் சாவு’,‘ஸ்டெர்லைட் ஆலையினால் மன்னார் வளைகுடாவுக்கு ஆபத்து’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.