உலகம்

இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய பணம் என்னாச்சு தெரியுமா?!

நிவேதா ஜெகராஜா

இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார். மேலும் அவர் தனது அதிபர் பதவியை வரும் 13ஆம் தேதி ராஜினாமா செய்வதாக கோட்டாபய தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் அபயரத்னே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போது அங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டுபிடித்ததாகவும் அது ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடெங்கும் மின்சாரம் இல்லாமல் தாங்கள் திண்டாடிக்கொண்டுள்ள நிலையில் அதிபர் மாளிகையில் ஏராளமான ஏர் கண்டிஷனர் இயந்திரங்கள் இயங்கிவாறு இருந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடுமையான பாதுகாப்புடன் இருந்த இலங்கை அதிபர் மாளிகை தற்போது சுற்றுலாத் தலம் போல் மாறியுள்ளது. உள்ளே நுழைந்துள்ள போராட்டக்காரர்கள் குழந்தைகளுடன் உணவருந்தி செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். அதிருபர் மாளிகைக்குள் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கின்றனர். போராட்டக்காரர்கள் அங்கு போடப்பட்டுள்ள சோஃபாக்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, அதிபர் மாளிகை ஒரு ரிசார்ட் போல் காட்சி அளிக்கிறது. அங்கேயே உணவருந்தியும், குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டியும் சுற்றுலா வந்தது போல் இருக்கின்றனர் மக்கள்.