இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையின் வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தியாவின் உளவு அமைப்பான ரா தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், ஆனால் இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் என பகிரங்க குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கை அதிபரின் இந்த குற்றச்சாட்டு இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மூலம் வெளியே கசிந்துள்ளது. இதனிடையே இதுகுறித்து அதிபரின் ஊடகப்பிரிவு மூத்த அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை நாங்கள் சரிபார்த்து அதுகுறித்து மீண்டும் உங்களுக்கு தெரிவிக்கிறோம் என கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி வெளியாகும் இந்த நேரம் வரை அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேசவுள்ள நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனே இந்த குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இது இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவின் உளவு அமைப்பான ராவை இலங்கை அதிகாரிகள் குற்றம்சாட்டுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து ஆட்சி மாற்றத்திற்கு ‘ரா’தான் காரணம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Courtesy: TheHindu