உலகம்

இனவாதத்திற்கு அடிபணியாமல் பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை : கோத்தபய ராஜபக்ச

webteam

தனது ஆட்சிக் காலத்திற்குள் தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்து ஒற்றையாட்சியை பாதுகாத்து பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு நவம்பர் 18ஆம் தேதி பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இந்த வருடத்திற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

ஜனாதிபதியின் நாடாளுமன்ற விஜயத்தை முன்னிட்டு நாடாளுன்ற வளாகத்தில் 21 வேட்டுக்கள், பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை நடத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவிட்டார். ஆகவே எந்த நிகழ்ச்சியும் நடத்தப்பட்டவில்லை. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுன்றத்திற்கு ஜனாதிபதி கோத்தபய வருகை தந்தார்.

அதனைத் தொடர்ந்து அரியணையில் அமர்ந்த ஜனாதிபதி, தனது கன்னிபேச்சை ஆரம்பித்ததுடன், கொள்கை விளக்கத்தையும் முன்வைத்து பேசினார். தற்போது நடைமுறையிலுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தினால் நாட்டில் பலவித பிரச்சினைகள் உருவெடுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இனவாத சக்திகளுக்கு அடிபணியாத மற்றும் நாட்டின் கௌரவத்தையும் அபிமானத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தனது ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பௌத்த சாசனத்திற்கு முதலிடம் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி கோத்தபய, இனவாத சிந்தனைகளை விதைத்து வரும் அரசியல்வாதிகள் அவற்றை கைவிட்டு நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் பணியில் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.