இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே அடிதடி ஏற்பட்ட நிலையில், அவைக்கு கத்தியுடன் வந்த எம்.பி. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியபோது, நாடாளுமன்றத்தில் பேசிய சபாநாயகர் கரு ஜெயசூர்யா, தற்போதைய சூழலில் எந்த ஒரு அரசுக்கும் பெரும்பான்மை இல்லை என்று தெரிவித்தார். எனவே நாட்டிற்கு பிரதமரும் இல்லை, அமைச்சரவையும் இல்லை என்று அவர் கூறினார். அப்போது மகிந்த ராஜபக்ச பேச முற்பட்ட நிலையில், அவருக்கு அனுமதி வழங்கிய சபாநாயகர் கரு ஜெயசூர்யா, நாடாளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்தித்தான் பேச வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து ராஜபக்ச பேசிய போது அவரது ஆதரவு எம்பிக்களுக்கும், ரணில் ஆதரவு எம்பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. எம்பிக்கள் அவையிலேயே ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பாலித்த தேவபெரும, தான் வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்தார். அவர் கையில் கத்தியுடன் நாடாளுமன்றத்தில் நடமாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்திற்கு கத்தி எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் கத்தியுடன் நாடாளுமன்றத்தில் வந்ததற்காக கைது செய்யப்பட்டார்.