உலகம்

‘நான் பதவி விலகப்போவதில்லை; மக்கள் போராட வேண்டியதுதான்’- மகிந்த ராஜபக்ச

‘நான் பதவி விலகப்போவதில்லை; மக்கள் போராட வேண்டியதுதான்’- மகிந்த ராஜபக்ச

kaleelrahman

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பெருங்கடன் சுமை காரணமாக இலங்கை கடும் சிக்கலுக்கு ஆளாகி தவித்து வருகிறது. முக்கியமான பொருட்களை இறக்குமதி செய்ய அரசிடம் பணம் இல்லாததாலும், விண்ணை முட்டும் விலை உயர்வாலும் பொதுமக்கள், தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் எழுச்சிமிகு போராட்டங்களால் அரசுக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது. இதனால் இலங்கையில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டு, அதிபர் கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக வானொலி ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். பிரச்னைகளைக் களைய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்த அவர், ஒருவேளை அப்படியொரு அரசை அமைக்க வேண்டிய சூழல் எழுந்தால் அதுவும் தனது தலைமையில் தான் அமைய வேண்டும் என்றும் கூறினார்.

வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ள முடியாதபோது இடைக்கால அரசால் என்ன பயன் கிட்டும் என்றும் அவர் வினவி உள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை எனில், அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்றும் வானொலி உரையில் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.