உலகம்

‌‌‌‌ஐ.எம்.எஃ.ப்.பிடம் மேலும் கடன் கேட்கும் இலங்கை: எத்தனை கோடி தெரியுமா?

‌‌‌‌ஐ.எம்.எஃ.ப்.பிடம் மேலும் கடன் கேட்கும் இலங்கை: எத்தனை கோடி தெரியுமா?

JustinDurai

ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் கோரி பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு குழு அமெரிக்கா சென்றுள்ளது.

கடும் பொருளதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி போராட்டங்கள் நாளுக்கு நாள் அங்கு வலுத்து வருகின்றன. இந்நிலையில் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மேலும் கடனுதவி கேட்க உள்ளது. இதற்காக அந்நாட்டு நிதியமைச்சர் அலி சாப்ரி, மைய வங்கி தலைவர் நந்தலால் வீரசிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது.

வாஷிங்டனில் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு ஐஎம்எஃப் அதிகாரிகளுடன் இலங்கை குழு பேசும் எனத் தெரிகிறது. பேச்சுவார்த்தையின்போது ஐஎம்எஃப்பிடம் மேலும் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை இலங்கை கோரும் எனத் தெரிகிறது. இது தவிர இந்தியா, சீனா ஆகிய நாடுகளிடமும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய வங்கிகளிடமும் இலங்கை கூடுதல் நிதியுதவி கோரி பேசி வருகிறது. இலங்கை வெளிநாடுகளுக்கு ஏற்கனவே 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதும் அவற்றை இப்போதைக்கு திரும்பத் தர முடியாது எனவும் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: GO HOME GOTA இலங்கையில் தொடரும் 7 நாள்களைக் கடந்த போராட்டம்!