இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனை பகுதியில் இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயம் பள்ளி 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி கட்டடத்தில் இராணுவ முகாம் இயங்கிவந்து. இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டநடவடிக்கையின் பயனாக இக்கட்டடம் கல்விக்காக மீண்டும் ஒப்படைக்கப்பட்டு அங்கு மாணவர்களில் கற்றல் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன.
முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலய தலைவர் எம்.தவனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரன் கலந்துகொண்டு 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வகுப்பறைகளை திறந்தார். "அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது" என்றதொனிப்பொருளில் மாணவர்களை மீண்டும் பள்ளிக்குள் கொண்டு செல்லும் நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இப்பள்ளியானது, கடந்த யுத்தகாலத்தில் இராணுவ முகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தேசிய மக்கள் சக்தி அரசிடம் பாடசாலை நிர்வாகம் விடுத்த வேண்டுகோளையடுத்து, அண்மையில் இக்கட்டடம் கல்வி செயல்பாட்டிற்காக மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம், இப்பாடசாலை மாணவர்கள் கல்வி கற்பதற்குரிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் காணப்பட்டது. பின்னர், கல்வி அமைச்சர் மற்றும் அப்பகுதி நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது