இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஐநூறுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந் துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
இந்நிலை யில் மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாடுவதாக தகவல் வந்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டபோது ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஐஎஸ். கொடி மற்றும் அவர்கள் பரப்புரைக்கான சாதனங்களும் கிடைத்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்தவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் ஐஎஸ் பயங்கர வாதிகள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.