அதிபர் சிறிசேன அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 350-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பே தகவல்கள் கிடைத்தும் தெரியவந்துள்ளது. இந்தியாவும் தாக்குதல் குறித்து எச்சரித்ததாக இலங்கை பிரதமர் நேற்று கூறியிருந்தார். ஆனால், தகவல்கள் கிடைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காதது குறித்து இலங்கை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. அதனால்தான், குண்டுவெடிப்பை தடுக்க தவறியதற்காக இலங்கை அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். குண்டுவெடிப்பு தாக்குதலை முறியடிக்க தவறியதை அடுத்து அவர் இந்த நடவடிக்கையை வலியுறுத்தலை முன் வைத்தார். மேலும், உளவுத்துறை பிரிவினரிடமிருந்து குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல் கிடைத்தும் அதனைத் தம்மிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிபர் சிறிசேன அறிவுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவுக்கு ஹேமசிறி பெர்னாண்டோ அனுப்பி வைத்தார். குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தரப்பில் தவறு எதுவும் நடக்கவில்லை என்றபோதும், சில துறை ரீதியான தவறுகளுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.