குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து 39 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா சலுகையை இலங்கை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஐநூறுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று பெண் களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கத்தோலிக்க தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்புக் கருதி மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள் ளது.
இந்நிலையில் 39 நாடுகளுக்கு வழங்கி வந்த விசா சலுகைகளை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா (John Amaratunga) கூறும்போது, 'பாதுகாப்பு கருதி சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டுச் சதி இருப்பது, விசாரணையில் தெரி ய வந்துள்ளது. இதனால் விசா வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை. அதனால் குறிப்பிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வந்து விசா பெற்றுக் கொள்ளும் வசதியை (visa on arrival ) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்’’ என்றார்.