உலகம்

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிடும் மகிந்த ராஜபக்ச... இலங்கையில் என்ன நடக்கிறது?

நிவேதா ஜெகராஜா

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது ராஜ்பக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை நீடிக்கிறது. இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகியதால் சொகுசு மாளிகையில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச. தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிக்கும் நிலையில் வெளிநாடு தப்பிச்சென்றார் மகிந்த ராஜபக்சவின் 2வது மகன். அவரைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சை என்ற காரணத்தைக்கூறி மகிந்தவும் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் அரசியல் நிலையற்றத்தன்மை நிலவுவதால் இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக, மஹிந்த ராஜபக்சவின் பூர்வீக வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவமும் இலங்கையில் நடந்து வருகின்றது. கிட்டத்தட்ட 35-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்ட பிறகே அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழும் எனக் கூறப்படுகிறது. ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு புதிய பிரதமரை அறிவிப்பதன் மூலம் நாட்டில் நீடித்து வரும் வன்முறைக்கு முடிவுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது.

அதிபர் இது தொடர்பாக ஏற்bனவே எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி இடைக்கால அமைச்சரவையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்கும் என்றும் கருதப்படுகிறது. எனினும் ஒருசில கட்சிகள் தயக்கம் காட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.