உலகம்

’’எரியும் நெருப்பில்.. ’’ - சொத்துக்களை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள இலங்கை அரசு உத்தரவு!

Sinekadhara

இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார சீர்குலைவுக்குப் பொறுப்பேற்று அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி, அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில், நேற்று வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக் களத்தில் நுழைந்து கண்மூடித்தனமாகத் தாக்கியதில், ஏழு பேர் உயிரிழந்தனர். 231 பேர் காயமுற்றனர். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள இவர்களில், 5 பேரின் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வன்முறையின்போது மகிந்த ராஜபக்சவின் பூர்வீக வீட்டுக்கும், அமைச்சர்கள் உள்பட 35க்கும் அதிகமான அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கத் தவறியது ஏன்? என்று விளக்கம் கேட்டு காவல்துறைக்கும், ராணுவத்துக்கும அந்நாட்டு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து வரும் 12 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இவை ஒருபுறமிருக்க, இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் கோட்டாபயவுக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து, பிரதமர் பதவியைத் துறந்து பிரதமர் இல்லத்தைவிட்டு மகிந்த ராஜபக்ச வெளியேறிய நிலையில், அவரது மகன் யோசிதா ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் மகிந்த ராஜபக்சவும் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவம் தொடர்ந்துகொண்டிருக்கக்கூடிய சூழலில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது முப்படைளும் துப்பாக்கிச்சூடு நடத்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.