உலகம்

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் - ஊரடங்கை அறிவித்தது இலங்கை அரசு!

சங்கீதா

நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கோட்டாபய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவசர நிலையை அறிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாகவும், அதிபர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அறிவிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் 2-வது முறையாக அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி கொழும்புவில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் நாளான்று குண்டு வெடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதைத்தொடர்ந்து நாடெங்கும் அசாதாரண சூழல் எழுந்த நிலையில் அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன அவசர நிலையை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்குபெறும் வகையில் ஆட்சி அமைக்க, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சி யோசனை தெரிவித்துள்ளது. அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆட்சி அமைக்க சிறிசேன கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இலங்கையில் அவசர நிலை அமலில் உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் ஆட்சி அமைக்க வேண்டும் என சுதந்திர கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.