உலகம்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

newspt

இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோட்டபய ராஜபக்ச பிரகடனம் செய்துள்ளார்

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறிக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கோட்டபய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோட்டபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவசர நிலையை அறிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாகவும் அதிபர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அறிவிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் 2ஆவது முறையாக அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி கொழும்புவில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் நாளான்று குண்டு வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதைத்தொடர்ந்து நாடெங்கும் அசாதாரண சூழல் எழுந்த நிலையில் அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன அவசர நிலையை அறிவித்திருந்தார்