உலகம்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு

rajakannan

இலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் ஆ‌லோசனைக் கூட்டம் நடைபெற்றது.‌ இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஏற்றுக் கொள்வதாக கூறிய சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து ஆட்சி நடத்தப் போவதில்லை என்றும் கூறினார். 

விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக்‌ கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டாம் என இலங்கை சுதந்திரக் கட்சியை கேட்டுக் கொண்டார். ராஜபக்சவை பிரதமராக நியமித்ததற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மீதான தீர்ப்புக்கு பிறகு புதிய பிரதமரை நியமிப்‌பது‌ குறித்து முடிவு செய்யப்படும் என சிறிசேன தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். மக்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர், நாளை ராஜினாமா செய்கிறார் என அவரது மகன் நமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு ராஜபக்ச இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ராஜபக்ச, அமைச்சரவைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவை நீக்க முடியாது என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.