உலகம்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 2 அமைப்புகளுக்கு தடை - மைத்ரிபால சிறிசேன

webteam

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தி மிலத்து இம்ராஹீம் ஆகிய அமைப்புகளை தடை செய்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருவிழாவின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், சில குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கல்முனை அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் அதிரடி படையினருக்கும் நேற்றிரவு சண்டை ஏற்பட்டது. மோதலின் போது பாதுகாப்பு படையினரிடம் சிக்காமலிருக்க, வீட்டிலிருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். அதனால், இலங்கையில் தொடர்ச்சியாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ள ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 'தேசிய தவ்ஹீத் ஜமாத்' மற்றும் 'ஜமாத்தி மிலத்து இம்ராஹீம்' ஆகிய அமைப்புகளை தடை செய்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

தமக்கு இருக்கும் அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி இவ்விரண்டு அமைப்புகளையும் அதிபர் மைத்ரிபால சிறிசேன தடை செய்திருப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்கும் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.