வெளிநாடு சென்று கல்வி பயின்ற இளைஞர்களே மனித வெடிகுண்டுகளாக மாறி இலங்கையில் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி இருப்பதாக ராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உள்பட 35 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. 9 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இலங்கை ராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே, மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் நன்கு படித்த, நடுத்தர மற்றும் மேல்தட்டு இளைஞர்கள் எனக் கூறினார். தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா சென்று மேற்படிப்பு பயின்றவர் என்றும் அவர் தெரிவித்தார். மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பேரில் ஒருவர் பெண் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் கூறிய அமைச்சர், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்த அடையாளத்தை இப்போது வெளியிட முடியாது, அது விசாரணையை பாதிக்கும் எனக் கூறினார். இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பும், அமெரிக்காவின் புலனாய்வு துறையும் விசாரணைக்கு தேவையான உதவியை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.