சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து pt desk
உலகம்

இலங்கை | சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து – 21 பேர் பலி; 35 பேர் காயம்

இலங்கை கொத்மலையில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

இலங்கையில், கதிர்காமத்தில் இருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த 35 பேர் நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், இரண்டு சிறுவர்கள் அடங்குவர் என நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனை அதிகாரி மகேந்திர சேனவீரட்ட தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.