spirit reuters
உலகம்

ஈரான் போர் | திவாலான அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம்.. சேவைகள் நிறுத்தம்!

கோடைக்காலங்களில் விமானங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஐரோப்பாவில் ஏற்படக்கூடும் என தகவல் வெளியானது.

Prakash J

ஈரான் போரால் விமான எரிபொருள் கிடைப்பதில் கடும் சிக்கல் நிலவியதும், அமெரிக்க அரசிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்காமல் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன்காரணமாக அனைத்துவிதமான செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துவதாக ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், ஈரான் வசமுள்ள ஹார்முஸ் ஜலசந்தி பாதைதான். இந்த வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. இதை, ஈரான் மூடிவைத்துள்ள நிலையில், அமெரிக்காவோ தனது கடற்படை மூலம் அதை முற்றுகையிட்டுள்ளது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, கோடைக்காலங்களில் விமானங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஐரோப்பாவில் ஏற்படக்கூடும் என தகவல் வெளியானது.

spirit airlines

இந்த நிலையில் ஈரான் போரால் விமான எரிபொருள் கிடைப்பதில் கடும் சிக்கல் நிலவியதும், அமெரிக்க அரசிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்காமல் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன்காரணமாக அனைத்துவிதமான செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துவதாக ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்பிரிட் நிறுவனம் மே 2, 2026 முதல் விமான சேவையை நிறுத்திக் கொள்வதாக மிகுந்த ஏமாற்றத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு, வாடிக்கையாளர் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்டுக்கான பணத்தைத் திருப்பியளிப்பதாகவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்பிரிட் நிறுவனத்தின் இந்த முடிவு விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் பயணிகளிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுக்கு மலிவான விலையில் விமானச் சேவை வழங்கி நீண்டகாலமாக இந்தத் துறையில் முக்கியப் பங்காற்றி வந்த ஸ்பிரிட் நிறுவனம், அமெரிக்க விமானப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகித்தது. ஸ்பிரிட் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டதட்ட 17,000 தொழிலாளர்கள் வேலை இழப்பால் பாதிக்கப்படுவர். இதில், ஸ்பிரிட் நிறுவனப் பணியாளர்கள் 14,000 பேர் அடங்குவர்.

spirit airlines

முன்னதாக, கடுமையாக உயர்ந்து வரும் எண்ணெய் விலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாக, ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா கடந்த மாதம் 20,000 விமானச் சேவைகளை ரத்து செய்ததாகத் தெரிவித்தது. இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா, தனது அனைத்து விமானங்களுக்கும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் தினமும் 100 விமானச் சேவைகளைக் குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.