உலகம்

போர் பதற்றம்: இந்தியர்களை அழைத்து வர உக்ரைன் பறந்தது ஏர் இந்தியா சிறப்பு விமானம்

Veeramani

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவும் போர்ச்சூழல் மற்றும் பதற்றங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று காலை உக்ரைனுக்கு புறப்பட்டது.

200க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட ட்ரீம்லைனர் பி-787 விமானம் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் தரையிறங்குகிறது. 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர்.

உக்ரைனுக்கு புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் நீக்கிய நிலையில், ஏர் இந்தியா பிப்ரவரி 18 அன்று இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் (VBM) விமானங்களை இயக்குவதாக அறிவித்தது. இவை பிப்ரவரி 22, 24 மற்றும் 26 தேதிகளில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரைனின் மிகப்பெரிய விமான நிலையமான போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிரிவினை கிளர்ச்சித் தலைவர்களுடன் பரஸ்பர உதவி மற்றும் நட்புறவு ஒப்பந்தங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டதால், உக்ரைன் மற்றும் ரஷ்யா எல்லைகளில் பதற்றம் மேலும் அதிகமாகியுள்ளது.


ரஷ்யா-உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது என்றும், இந்த நெருக்கடியைத் தணிப்பதே உடனடி முன்னுரிமையான பணி என்றும் இந்தியா கூறியது.