உலகம்

"25 வருஷமா சம்பளமில்லாத வேல..."- பாலின பாகுபாட்டுக்கு அதிரடி முடிவுகட்டிய ஸ்பெயின் பெண்!

"25 வருஷமா சம்பளமில்லாத வேல..."- பாலின பாகுபாட்டுக்கு அதிரடி முடிவுகட்டிய ஸ்பெயின் பெண்!

JananiGovindhan

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும், பெண்களுக்கான தனி உரிமையை நிலைநாட்டு விதமாகவும் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாளன்று சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

21ம் நூற்றாண்டில் நாமெல்லாம் வாழ்நாளை கடத்திக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட்டிருக்கிறதா என்றால் அது இப்போதும் கேள்விக்குறியே. அதிலும் வெளியுலகில் உச்சபட்ச அதிகாரத்தில் பெண்கள் இருந்தாலும், இன்றளவும் ஏராளமானோரின் வீட்டில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது என்னவோ நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

பாலின சமத்துவம் என்பது நாட்டில் பரவ வேண்டுமென்றால் அது முதலில் வீட்டில் மலர வேண்டும் என்பதே உலகில் உள்ள எல்லா பெண்களின் அவா. இந்த அவா இன்றைய தேதிக்கு அனைவரது வீட்டிலும் நிறைவேறியுள்ளதா என்றால், அதற்கு இல்லை என்பதே ஒருமித்த பதிலாக இருக்கும்.

இந்திய சமுதாயத்தை பொருத்தவரையில் பெரும்பாலும் ‘பாலின சமத்துவமா அப்படினா என்ன? தூத்துக்குடி பக்கம், உசிலம்பட்டி பக்கம் இருக்கு’னு வடிவேலு காமெடி பாணியிலேயே கடந்து செல்வார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அப்படி இருக்காது. பெரும்பாலான வீடுகளில் உள்ள வேலைகளை ஆண் பெண் இருவரும் சமமாக பிரித்தோ அல்லது ஒன்றிணைந்து செய்வதையே கடைபிடித்து வருகிறார்கள்.

இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் மத்தியில் சமமின்மையும் நிகழ்வதுண்டு. ஆனால் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதனை களைய அந்தந்த நாட்டு சட்டங்கள் ஆதரவாக இருக்கின்றன. அப்படியான நிகழ்வு ஒன்றுதான் ஸ்பெயினில் நடந்திருக்கிறது.

நிகழ்வு என்னவெனில், இரு குழந்தைகளுக்கு தாயான இவானா மாரல் என்ற பெண் தனது கணவர் வீட்டு வேலையையும் பார்க்கச் செய்து, அவரது உடற்பயிற்சி கூடத்தையும் கவனிக்கச் செய்ய சொல்கிறார் என வழக்குத் தொடர்ந்து விவாகரத்து பெற்றதோடு, ஜீவனாம்சமும் பெற்றிருக்கிறார்.

1995ம் ஆண்டு இவானாவின் திருமணம் நடந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு விவாகரத்தோடு அது முடிந்திருக்கிறது. இவானாவின் 25 ஆண்டுகால திருமண இல்வாழ்க்கையில் முழுக்க முழுக்க அவரது இரு பெண் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டும், வீட்டு வேலைகள் அனைத்தையும் ஒற்றை ஆளாக செய்தும் வந்திருக்கிறார் அவர்.

அந்த சமயங்களில் கணவர் எந்த வகையிலும் உறுதுணையாக இல்லாத காரணத்தால் மனம் நொந்துப்போன இவானா விவாகரத்து செய்திருக்கிறார். இந்த விவாகரத்து வழக்கு தெற்கு ஸ்பெயினில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கான தீர்ப்பில்தான், “இத்தனை ஆண்டுகளாக ஊதியமே இல்லாமல் வீட்டு வேலைகளை பார்க்கச் செய்ய வைத்தது முழுக்க முழுக்க கொடுமையானது.

இதனால் 25 ஆண்டுகளுக்கான ஆண்டு ஊதியமாக கணக்கிட்டு இவானாவுக்கு 444 பவுண்டும், அவர்களது இரு குழந்தைகளுக்கு 356, 533 பவுண்டுகள் முறையே மாதாமாதம் கொடுக்க வேண்டும். இதுபோக மொத்தமாக 1,82,000 பவுண்டுகள் (1 கோடியே 76 கோடி ரூபாய்) ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என இவானாவின் முன்னாள் கணவரும் தொழிலதிபருமானவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.