மத்திய ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள ஊர்டா மற்றும் லாஸ் யெபெனஸ் இடையே மாட்ரிட்டிலிருந்து செவில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த 'ரென்பே' அதிவேக ரயில், அதே பாதையில் நின்றுகொண்டிருந்த 'இரியோ' அதிவேக ரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி, சுமார் 4 மீட்டர் ஆழமுள்ள சரிவான பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தன. ரென்பே ரயிலில் 397 பேரும், இரியோ ரயிலில் 147 பேரும் என இரு ரயில்களிலும் சேர்த்து மொத்தம் 544 பயணிகள் பயணம் செய்த நிலையில், இந்தக் கோர விபத்தில் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர்; 179-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரப் பிரிவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் நடமாடும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். விபத்தைத் தொடர்ந்து நாட்டின் தலைநகர் மாட்ரிட் மற்றும் அண்டலூசியா இடையேயான அதிவேக ரயில் வழித்தடப் போக்குவரத்து முழுமையாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 2013-ல் சான்டியாகோ டி கம்போஸ்டெலாவில் 80 பேர் உயிரிழந்த விபத்திற்குப் பிறகு, ஸ்பெயினில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. விபத்து தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டு ஜனவரி 18 அன்று, கோர்டோபா மாகாணத்தில் உள்ள அடாமுஸ் அருகே அதிவேக ரயில் ஒன்று தடம் விலகி, எதிரே வந்த ரயில் மீது மோதியதில் 46 பேர் உயிரிழந்தனர் மற்றும் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.