உலகம்

4 பேருடன் விண்வெளிக்கு செல்லும் INSPIRATION4 விண்கலம்

கலிலுல்லா

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்ல வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான முன்னோடி திட்டத்தை அடுத்த வாரம் செயல்படுத்த இருக்கிறது எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இதற்காக நான்கு பேர் மூன்று நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

பெரும் பணக்காரர்களான ரிச்சர்டு பிரான்ஸன் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்ட விண்வெளி சுற்றுலா திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல இருக்கிறார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க். வரும் 15ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நான்கு பேரை மூன்று நாட்களுக்கு விண்வெளி சுற்றுலா அழைத்து செல்ல இருக்கிறது. ஃபுளோரிடாவில் உள்ள நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபால்கன் ராக்கெட் மூலம் INSPIRATION4 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

உலக பணக்காரர்களுள் ஒருவரும், விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை பெற்றவருமான ஜேர்ட் ஐசக் மேன், இந்த விண்கலத்தை இயக்குகிறார். இவருடன் மூன்று பேர் விண்ணுக்கு பயணிக்கின்றனர். விண்வெளி வீரர்கள் அல்லாமல் பொதுமக்கள் நான்கு பேரை விண்ணுக்கு அழைத்து செல்லும் முதன் விண்வெளி திட்டம் இது என சொல்லப்படுகிறது. புவி வட்டப்பாதையை சுற்றி வரும் வகையில் விண்ணில் இருந்து புவியின் அழகை ரசிக்கும் வகையில் INSPIRATION4 விண்கலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விண்வெளி சுற்றுலாவின் மிக முக்கிய நோக்கம், மனிதர்கள் விண்ணுக்கு செல்லும் போது அவர்களின் உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு செய்வது தான். இது வருங்கால விண்வெளி திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே இந்த நான்கு பேரின் ரத்த மாதிரிகள் விண்ணுக்கு செல்வதற்கு முன்பும் விண்ணில் இருந்து திரும்பிய பின்னரும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இது தவிர விண்வெளியில் இவர்களின் இதய துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, தூக்கம் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் என்ற இலக்கை எட்ட எலோன் மஸ்க் முயன்று வரும் நிலையில் அதற்கான தொடக்கமாக இந்த விண்வெளி பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.