உலக நாடுகளில் உள்ள அனைத்து கல்வி அமைச்சகத்தையும், மலைக்க வைக்கும் அளவிற்கு திருவிழா போல பிரமாண்டமாக பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடைபெற்றுள்ளது.
தென்கொரியாவில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ட்ரம்ஸ் வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு, மறு பக்கம் தேர்வு எழுதும் தங்களது குழந்தைகள் தேர்ச்சி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் பெற்றோர்கள் என பரப்பரபாக காட்சி அளித்தது தென் கொரியா.
இதற்கு ஒரு நுழைவு தேர்வுதான் காரணம். சுமார் 9 மணி நேரம் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வுக்காக பங்குச் சந்தைகள் தாமதமாக திறக்க வேண்டும், தேர்வு முடியும் வரை விமானம் பறக்கவோ, தரையிறங்கவோ தடை, வங்கிகள் தாமதாக இயங்க வேண்டும், ஆயிரகணக்கான காவலர்கள் பாதுகாப்பு, தேர்வு மையங்கள் தெரியாமல் குழம்பி நிற்கும் மாணவர்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க போக்குவரத்து காவலர்கள், கூடுதல் ரயில், பேருந்து என அடுக்கடுக்கான வசதிகளும், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதால் தென்கொரியாவே ஸ்தம்பித்து நின்றது.
இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் தென்கொரியவில் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் நாட்டில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் மேல் படிப்புக்காக சேர முடியும். எனவே இந்தப் பல்கலைக்கழகத் தேர்வுக்கு ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
சுமார் 5 லட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட இந்தத் தேர்வில் மொழிப்பாடம், கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலம் மற்றும் இரண்டாவதாக பிற நாட்டு மொழிப்பாடங்கள் உள்ளிட்ட 5 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. இந்தத் தேர்வு இல்லையென்றால் இன்னொரு தேர்வு என்று காலத்தை கடந்து செல்லும் இன்றைய மாணவர்கள் மத்தியில் இப்படி ஒரு தேர்வும், தேர்வுக்கான ஏற்பாடுகளும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.