உலகம்

“குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும்”: வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா

“குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும்”: வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா

webteam

தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது.

தென்கொரியத் தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சு சோ சுக், வரும் 21 ஆம் தேதி வடகொரியாவில் பன்முன்ஜோம் பகுதியில் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

கொரிய போர் முடிவடைந்த 63வது நினைவு தினம் அனுசரிக்கப்படும் வரும் 27 ஆம் தேதி எல்லையில் எதிர்ப்பு செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று தென்கொரியா கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் பிரிந்த குடும்பங்கள் ஒருங்கிணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் தென்கொரி‌யா அழைப்பு விடுத்துள்ளது. தென்கொரிய அதிபராக பதவியேற்ற மூன் ஜே இன், பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவுடனான பதற்றத்தை குறைக்க விருப்பம் தெரிவித்து வருவதால், இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2015 டிசம்பர் மாதம் தான் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை ஆகியவற்றை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவிற்கு சவால் விடும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ராணுவ பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.