தென் கொரியா விபத்து எக்ஸ் தளம்
உலகம்

தென் கொரியா விமான விபத்து| இடைக்கால அதிபர் அதிரடி உத்தரவு!

தென் கொரியாவில் விமான விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த விமான உள்கட்டமைப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டின் தற்காலிக அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Prakash J

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 181 பயணிகளுடன் வந்த ஜேஜு ஏர் (Jeju Air) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், தென் கொரியாவின் முவானில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் முன்சக்கரம் செயலிழந்ததால், ஓடுபாதையை தாண்டி கான்க்ரீட் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, விமானத்தில் தீப்பிடித்ததால், அதிலிருந்த பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்த விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து தென் கொரியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த விமான உள்கட்டமைப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டின் தற்காலிக அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக, முவான் விமான நிலையத்தில், உயிரிழந்த 179 பேருக்கும், தற்காலிக அதிபரான சோய் சாங் மாக் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியா விமானம்

முன்னதாக, தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராகச் செயல்பட்ட ஹான் டக்-சூவுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.