தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. டிசம்பர் 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதன்மூலம் கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபர் ஆனார். எனினும், இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இவ்வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றம் அவரது பதவிநீக்கத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, அந்நாட்டின் தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அன்றைய நாள் தற்காலிக பொது விடுமுறையாக கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு யூன் சுக் இயோல் கட்சிக்கும் 2022ஆம் ஆண்டு யூனிடம் மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவரான லீ ஜே-மியுங், முன்னணிப் போட்டியாளராக உள்ளார். எனினும், அவர்மீதும் தேர்தல் விதிமீறுதல் மற்றும் லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட கேலப் கருத்துக்கணிப்பின்படி, ’34% பேர் லீ ஜே-மியுங்கை அடுத்த அதிபராக தேர்வு செய்துள்ளனர். 9% பேர் பழமைவாத கிம் மூன்-சூவையும், 5% பேர் முன்னாள் ஆளும் கட்சித் தலைவர் ஹான் டோங்-ஹூனையும் தேர்வு செய்துள்ளனர்.