உலகம்

நிலத்தடி பதுங்குகுழியில் இருந்து பணியை தொடங்கினார் தென்கொரியவின் புதிய அதிபர்

Veeramani

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதட்டமான சூழலுக்கு இடையில், ஜனாதிபதி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட நிலத்தடி பதுங்கு குழியில் இருந்து தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக யூன் சுக் யோல் தனது பணியை தொடங்கினார்.

தென் கொரியாவின் புதிய அதிபர்  யூன் சுக்-யோல் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தில் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைமைத் தளபதியாக தனது பணியை தொடங்கினார். அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து நள்ளிரவில் அலுவல் பணிகளை தொடங்கிய அவர், சில மணிநேரங்களுக்குப் பிறகு, சியோலின் தேசிய நாடாளுமன்றத்தில் முறையான விழாவில் அதிபராக பதவியேற்றார்.

அதிபராக பதவியேற்ற பின்னர் பேசிய யூன் சுக்-யோல், "ஜனாதிபதியின் கடமைகளை உண்மையாகச் செய்வேன் என்று மக்கள் முன் நான் சத்தியம் செய்கிறேன். வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் நமக்கு மட்டுமின்றி வடகிழக்கு ஆசியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருந்தாலும், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கும், இதனால் இந்த அச்சுறுத்தலை நாம் அமைதியாக தீர்க்க முடியும். ஒருவேளை வடகொரியா அணுவாயுதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கினால், அதற்கு எதிராக ஒரு துணிச்சலான திட்டத்தை முன்வைக்க தயாராக இருக்கிறேன்" என தெரிவித்தார்.

26 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றிய யூன் (வயது 61), அரசியலில் நுழைந்து ஒரு வருடத்திற்குள் கன்சர்வேட்டிவ் மக்கள் அதிகாரக் கட்சியின் தலைமை பொறுப்பேற்று மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.