தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதன்மூலம் கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபர் ஆனார்.
எனினும், இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இவ்வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று (ஜூன் 3) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மனித உரிமை வழக்கறிஞரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான லீ ஜே-மியுங்கும், மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் கிம் மூன்-சூவும் போட்டியிட்டனர். இதில் லீ ஜே-மியுங் 49.42 சதவீத வாக்குகளைப் பெற்று வடகொரியாவின் அடுத்த அதிபராகப் பதவியேற்க உள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னதாகவே கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருந்த லீ ஜே-மியுங், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் அவரே முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு பேசிய மியுங், “வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். மற்றொரு இராணுவ சதி அல்லது இராணுவச் சட்ட நெருக்கடி மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வேன்” என உறுதியளித்தார்.
61 வயதான வழக்கறிஞரான மியுங், கடந்த சில ஆண்டுகளில் தென் கொரிய அரசியலில் ஒரு முக்கிய நபராக உள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, மியுங் தெற்கு சியோலில் உள்ள சியோங்னாமின் மேயராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் கியோங்கி மாகாணத்தின் ஆளுநராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், யூன் சுக்-இயோலிடம் மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, கொரிய அரசியலில் செல்வாக்கு மிக்க நபராக ஆனார்.
2024ஆம் ஆண்டு, மியுங் பூசானுக்குச் சென்றிருந்தபோது ஏழு அங்குல நீளமுள்ள கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். தென்கொரியாவில் இராணுவச் சட்ட நெருக்கடியின்போது, முன்னாள் அத்பர் யூன் சுக்-இயோல், தேசிய சட்டமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டார். இருப்பினும், லீ ஜே-மியுங் உட்பட பல அரசியல்வாதிகள், இராணுவச் சட்டம் திணிக்கப்படுவதற்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் மீறினர். இதற்காக அவர் தேசிய சட்டமன்றத்தின் சுவர்களில் ஏற முயன்ற காட்சி வைரலானது. இதைத் தொடர்ந்து பின்னர் தேசிய சட்டமன்றம் இராணுவச் சட்டத்தை அகற்றுவதற்கு வாக்களித்தது.