மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம் pt web
உலகம்

மருத்துவர் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் தென் கொரிய அரசு... வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள்

Angeshwar G

தென்கொரிய மருத்துவக்கல்லூரிகளில் 2025 ஆம் கல்வியாண்டில் இருந்து 2 ஆயிரம் மருத்துவக்கல்வி இடங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் மருத்துவக்கல்வி இடங்களை அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

தென் கொரியா மிகக்குறைந்த மருத்துவர் நோயாளி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு 1000 நோயாளிகளுக்கு 2.5 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக அரசு மேலும் அதிக மருத்துவக்கல்வி இடங்களை அதிகரிக்க திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த முடிவு மருத்துவர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கருதுவதால், போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்நாட்டில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பொதுமக்களில் 80% வரையிலானோர் அரசின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

தென் கொரியா தனியார் மயமாக்கப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளின் ஒன்று. இங்கு 90%க்கும் அதிகமான மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளாகவே உள்ளன. இதனால் இந்நாட்டின் மருத்துவர்கள் உலகிலேயே அதிக ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர். அவர்களது இங்குள்ள ஊதியம் தேசிய சராசரி ஊதியத்தை விட அதிகமானது என கூறப்படுகிறது. அதேசமயத்தில் அந்நாட்டில் வயதான மக்கள் தொகையின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகமாக தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கும் அரசின் திட்டத்தைக் கண்டித்து சுமார் 8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். செவ்வாய் அன்று நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் சியோல் மற்றும் பிற நகரங்களில் பேரணியாக சென்றனர். அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து தங்களிடம் ஏதும் ஆலோசிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். அரசாங்கம் இத்திட்டத்தை மேற்கொண்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் கொரிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவு சிரமங்களுக்கு ஆளாகினர். அறுவை சிகிச்சைகள் தாமதம், சிகிச்சை பாதிப்பு என பல மருத்துவமனைகளிலும் மக்கள் அவதிப்பட்டனர். ஏற்கெனவே போதிய அளவில் மருத்துவர்கள் உள்ள நிலையில், மேலும் அதிக மருத்துவர்களை உருவாக்குவதாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கடந்த ஞாயிறன்று அந்நாட்டின் பிரதமர் ஹான் டக் சூ, மருத்துவர்கள் ராஜினாமா செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருக்குமென்றும், மக்களின் உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்யும் பயிற்சி மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகள் பயிற்சி மருத்துவர்களது ராஜினாமாக்களை நிராகரிக்குமாறும், பயிற்சி மருத்துவர்கள் தங்களது தினசரி பணிகள் குறித்த பதிவுகளை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.