‘ஜான் சீனா’ என்பவர் அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரர். அதுமட்டுமின்றி பாடிபில்டர், நடிகர் மற்றும் WWE என்ற பொழுதுபோக்கு சண்டைப் போட்டியில் வீரராக ஒப்பந்தத்தில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது. இவருக்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த ஜான் சீனாவின் பிறந்த தினம் இன்று தான். இன்றுடன் அவருக்கு 42 வயது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஜான் சீனாவின் பிறந்த தினமான இன்று அவர் தொடர்பாக 10 சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
1. WWE சண்டைப் போட்டியில் பல பாடி பில்டர்களுடன் பயமின்றி மோதும் இந்த ஜான் சீனாவிற்கு சிறுவயது முதலே ஸ்பைடர் (எட்டுக்கால்) பூச்சி என்றால் அத்தனை பயமாம். இன்றும் அவர் ஸ்பைடரைக் கண்டால் தொடை நடுங்கிப் போய்விடுவார்.
2. WWE-ல் ஜான் சீனாவுடன் பலமுறை கடினமாக சண்டையிட்டுள்ளவர் ரேண்டி ஆர்டன். ஆனால், உண்மையில் WWE-ஐ விட்டு வெளியே வந்து பார்த்தால் ரேண்டி ஆர்டன் தான் ஜான் சீனாவின் நெருங்கிய நண்பராம்.
3. ஜான் சீனாவின் பிடித்தமான மல்யுத்த வீரர் WWE-ல் புகழ் பெற்ற மூத்த மல்யுத்த வீரர் ஹல்க் வோகன். அத்துடன் ஜான் சீனாவிற்கு ஆரம்பம் முதலே ‘தி ராக்’ போன்று ஒரு ஸ்டாராக மாற வேண்டும் என்பதே ஆசையாம்.
4. ஜான் சீனா 12 வயதிருக்கும்போது பள்ளியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். அப்போதிருந்தே தான் பலமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் பளுத்தூக்கி பழகியுள்ளார்.
5. ஒரு முறை ஜான் சாப்பிட்ட உணவு உபாதையை ஏற்படுத்த அவர் கடுமையான வயிற்று வலிக்கு ஆளாகினார். ஆனாலும் அவர் WWE சண்டையில் பங்கேற்றார். அவர் வயிற்று பிரச்னையில் இருக்கிறார் என்பதை அறிந்தும், அவரை ஸ்காட் ஸ்டைனர் என்ற வீரர் வயிற்றில் முட்டியுள்ளார். இதுவே தனது கசப்பான WWE அனுபவம் என ஜான் தெரிவித்துள்ளார்.
6. ஜான் சீனாவிற்கு தன்னலமற்ற மனிதர் என்ற விருதை தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது.
7. WWE மற்றும் மல்யுத்த வீரர் ஆவதற்கு முன்பு வரை கோல்ட் ஜிம் என்ற உடற்பயிற்சி கூடத்தின் விளம்பரத்திற்கு நடித்து வந்தார்.
8. வலது கையால் வேகமாக குத்து விடும் சீனா, இடது கையால் எழுதும் பழக்கம் உடையவர்.
9. மல்யுத்தத்தில் பிரியம் கொண்ட இவர், பாடிபில்டிங் வடிவில் உருவாக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட கார்களை விரும்பி வாங்கியுள்ளார்.
10. திரைப்படங்கள் மட்டுமின்றி ஜான் சீனா ‘டீலா நோ டீலா’ உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.