பெருவில் உணவுத் தேடி நிலப்பரப்பிற்கு வந்த கடல் சிங்கங்கள் மீட்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.
புவி வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருவதாகவும் இதனால் உலக அளவில் கடல் மட்டத்தில் அளவு உயரவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான குழு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. முன்பெல்லாம் கடல் மட்ட உயர்வு தொடர்பான பாதிப்புகள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை எப்போதாவது நடக்கும்.
ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் அடிக்கடி பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது தாழ்வான நகரங்களுக்கும், சிறிய தீவுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரு நாட்டின் தலைநகர் லிமா பகுதியில் ஆறு கடல் சிங்கங்கள் உலாவி வருவதாக அப்பகுதி மக்கள் கடல் ஆய்வாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆய்வாளர்கள் அவற்றை மீட்டு பசிபிக் கடற்கரையில் விட்டனர். வெப்பநிலை மாற்றம் காரணமாக கடலில் மீன் குறைந்ததால் உணவுத்தேடி கடற்சிங்கங்கள் நிலப்பரப்பிற்கு வந்ததாக கூறப்படுகிறது.