தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் தப்பி லண்டனில் வசித்து வந்த மலாலா, ஆறு வருடத்துக்குப் பிறகு தனது சொந்த ஊருக்கு இன்று திரும்பினார்.
பாகிஸ்தானில் கடந்த 2012ம் ஆண்டில் பள்ளிக் கூட பஸ்சில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சிறுமி மலாலா. அந்த பேருந்தை நடுவழியில் நிறுத்திய முகமூடி அணிந்த தலீபான் தீவிரவாதிகள் மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பினர். பெண் கல்வியை வலியுறுத்தி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர்.
இதில் உயிர் தப்பிய மலாலா, வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் குணமடைந்தார். கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
இப்போது லண்டனில் வசித்து வரும் அவர், கடந்த வாரம் 23 ஆம் தேதி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்த நாளில் வீட்டின் மேற்பகுதியில் கிரிக்கெட் விளையாடியது மற்றும் பள்ளிக் கூடத்தில் தேசிய கீதம் பாடியது போன்ற இனிமையான நினைவுகளால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் திரும்பினார். பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார்.