உலகம்

இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் நெஞ்சை உலுக்குகிறது - உலக சுகாதார அமைப்பு வேதனை

JustinDurai

இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளும் முன்வந்துள்ளன.

இந்தநிலையில், இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ''இந்தியாவில் நிலவும் சூழலை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது. முக்கியமான உபகரணங்கள் வழங்குவது, விநியோகம் செய்வது என எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். இதுவரை ஆயிரக்கணக்கில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் ஆய்வுக் கூடங்களுக்கான வசதிகளையும் நடமாடும் மருத்துவமனை வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா பரவலில் இந்தியாவுக்கு உதவ போலியோ, காசநோயைபோல் 2,600-க்கும் மேற்பட்ட நிபுணர்களை அனுப்பியுள்ளோம்'' என்று கூறினார்.