உலகம்

பேயால் சிங்கப்பூர் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை.. CCTVயால் அம்பலமான அதிர்ச்சி..!

JananiGovindhan

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், வன்கொடுமைகள் பலவும் உலகெங்கும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அரசு தரப்பிலிருந்து இதனை தடுக்க என்னதான் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பாலியல் குற்றங்கள் அனுதினமும் பதிவாகி வருவது மட்டும் முடிந்தபாடில்லை.

அந்த வகையில், சிங்கப்பூரில் திருமணமான பெண் ஒருவருக்கு வீட்டு உரிமையாளரால் நிகழ்ந்த கொடூரம் தற்போது அம்பலமாகியிருக்கிறது. சிங்கப்பூரின் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் வசித்துவந்த பெண்ணுக்குதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

கடந்த மே மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மேற்குறிப்பிட்ட குடியிருப்பிற்கு வாடகைதாரராக குடியேறியிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வீட்டு உரிமையாளர் சார்பில் வரவேற்பு பார்ட்டியும் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது அந்த பெண் போதையில் இருந்ததால் அவர் உடனே வீட்டிற்கு சென்று தூங்கியிருக்கிறார்.

அன்றைய இரவன்று தன்னை எவரோ முத்தமிட்டதை போல உணர்ந்திருக்கிறார். முதலில் தன்னுடைய கணவன் என நினைத்த அப்பெண், அந்த உருவத்தை நிழலை பார்த்து கணவன் இல்லை என தெரிந்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அந்த உருவத்திற்கு தலைமுடி இருந்ததும், அவரது கணவருக்கு வழுக்கை தலை என்பதால் அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.

அந்த உருவத்தின் சீண்டல்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்திருக்கிறதாம். இதுப்போன்று அடிக்கடி நடந்ததால் முதலில் வீட்டு உரிமையாளராக இருக்குமா அல்லது ஏதும் பேய் தொந்தரவாக இருக்குமா என அச்சப்பட்டிருக்கிறார்கள்.

அதனால் பெட் ரூமில் சிசிடிவி கேமிராவை பொருத்தியிருக்கிறார்கள். அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியன்று அந்த வீட்டு உரிமையாளர் மீண்டும் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போதும் அப்பெண் போதையில் இருந்ததால் தூங்கச் சென்றிருக்கிறார். அன்றைய இரவும் அந்த உருவம் அப்பெண்ணை பாலியல் தொல்லை செய்திருக்கிறது.

இதனையடுத்து சிசிடிவி காட்சியை பார்த்தபோது அந்த வேலையை செய்தது 38 வயதான அந்த வீட்டின் உரிமையாளர் என தெரிய வந்ததும் கையும் களவுமாக பிடித்து கோர்ட் முன் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அப்போது சிசிடிவி ஆதாரத்தோடு ஆஜரான அந்த பெண்ணும், கணவரும் தனக்கு நேர்ந்ததை எடுத்து கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து அந்த ஹவுஸ் ஓனர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதன் பிறகு ஹவுஸ் ஓனரின் தொல்லையால் பாதிக்கப்பட்ட அந்த தம்பதி வீட்டை காலி செய்திருக்கிறார்கள்.