தனது குடும்பப் பிரச்னை பெரும் சர்ச்சையைக் கிளப்பி, அதன் காரணமாக ஒரு அசாதாரணமான சூழலை ஏற்படுத்திய காரணத்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார், அந்நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங்.
சிங்கப்பூர் மக்களிடம் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றிய சிங்கப்பூர் பிரதமர் லீ, "38 ஆக்ஸ்லி ரோட்டிலுள்ள எங்களின் குடும்ப இல்லம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பூர்வீக வீடு குறித்து, கடந்த சில நாட்களாக என் சகோதரர்களுக்கும் எனக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் இடையிலான இந்த சூழல் தொடர்பாக நான் சிங்கப்பூர் மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”.
மேலும், “எனது குடும்ப பிரச்னை, என்னையும் எனது அமைச்சரவையைச் சார்ந்த உறுப்பினர்களையும் நாட்டை நிர்வகித்து வரும் தங்கள் பொறுப்பிலிருந்து நிச்சயம் திசை திருப்பாது என்று நான் உங்களிடம் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 'சிங்கப்பூரின் தந்தை' என்றழைக்கப்படும் லீ குவான் யூ-வின் மூத்த மகன் இந்த லீ சியென் லூங் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ஒருவர் இத்தகைய வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டது, சமூக வலைதளங்களில் அவருக்குப் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.